HistoryVokkaligars

Cumbum கம்பம் நந்தகோபாலன் சாமி தம்பிரான் மாட்டுத்தொழு வரலாறு

கம்பம் நந்தகோபாலன் சாமி தம்பிரான் மாட்டுத்தொழு வரலாறு இது கம்பம் நகரில் அமைந்துள்ள ஸ்ரீநந்தகோபால் கோவிலில் அமைந்துள்ளது. டாக்டர் B.S.பலிகா என்பவர் Madras District Gazatteels Madurai என்ற புத்தகத்தில் இந்நகரம் பற்றியும் தம்பிரான் மாட்டுத்தொழுவம் உருவானதும் பற்றியும் கூறும் கருத்துகள் பின்வருமாறு 

Cumbum நந்தகோபாலன் சாமி தம்பிரான் மாட்டுத்தொழு வரலாறு 

கம்பம் நகரில் வாழும் பெரும்பான்மையான மக்கள் கன்னடம் பேசும் காப்பிலியர்களாவர். முற்காலத்தில் அனுப்பர் என்றழைக்கப்படும் கன்னடம் பேசும் மற்றொரு இனத்தவர்கள் இப்பகுதியில் பெரும்பான்மையான அளவில் வாழ்ந்து வந்துள்ளனர். இவ்விரு இனத்தவர்களிடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு காப்பிலிய  ராமச்ச கவுடர் கொல்லப்பட்டார். ராமச்சகவுடர் இறக்கும் தருவாயில் அனுப்பர் குலம் இனி முன்னேறாது என்றும் நாளடைவில் இக்குலம் இந்நகரை விட்டு படிப்படியாக அழிந்து விடும் என்றும் சாபமிட்டுள்ளார். 

கம்பம் நந்தகோபாலன் சாமி தம்பிரான் மாட்டுத்தொழு

இது மட்டுமல்லாது மாட்டுத்தொழுவும் ஒன்று இவ்விடத்தில் பராமரிக்கப்பட்டு அங்கு தம்பிரான் மாடு என்றழைக்கப்படும் மாடுகளும் சிறப்பாக வளர்க்கப்பட்டு வருகின்றன. 

கன்னட நாட்டிலிருந்து குடியேறியுள்ள கன்னடம் பேசும் இனமான கம்பம் நகரைச் சேர்ந்த காப்பிலியர்கள் கன்னடத்தில் ‘தேவரு ஆவு’ என்றும் தமிழில் ‘தம்பிரான் மாடு’ என்றும் அழைக்கப்படும் பசு மாடுகளை ஒரு தொழுவத்தில் வளர்க்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். இந்த தொழுவத்தில் வளர்க்கப்படும் மாடுகள் இறந்தால் புதைக்கப்படுகின்றன. இந்த மாட்டுத்தோலைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் பசுமாடுகளிலிருந்து பால் கறக்கப்படுவதில்லை கன்றுகளுக்கே முழுமையாகக் கொடுக்கப்படுகிறது. 

இச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எங்கிருந்தாலும் தங்கள் வீட்டில் வளர்க்கும் பசுமாடுகள் தைத்திங்கள் முதல் நாளில் ஈனும் கன்றுகளை அத்தம்பிரான் மாட்டுத்தொழுவத்திற்குக் கொண்டு வந்து விடுவது வழக்கமாக உள்ளது.

Cumbum – நந்தகோபாலன் சாமி – பட்டத்துக்காளை வரலாறு

நந்தகோபாலன் சாமி தம்பிரான் மாட்டுத்தொழுவத்தில் 400 மாடுகள் உள்ளன. அவைகளுக்கு தலைவனாக விளங்குவது பட்டத்துக்காளை. அதனை தேர்வு செய்யும் நடைமுறை சுவாரஸ்யமானது. வரலாற்று தொடர்பும் கொண்டது. 

தேவராவலு என்ற இனத்தை சேர்ந்த காளையே பட்டத்துக்காளையாக தேர்வு செய்யப்படுகிறது. தேவர்+ ஆவலு என்று இதை பிரித்து பொருள் கொள்கிறார்கள். ‘ஆவலு’ என்பது பசுவை குறிக்கிறது. தேவராவலு என்றால் தேவர்களின் பசு என்று பொருள். அந்த வகை பசுக்கள் ஈன்ற கன்றுகளில் இருந்தே பட்டத்துக் காளை தேர்வு செய்யப்படுகிறது.

இந்த கோவிலுக்கு பக்தர்கள் தானமாகவும் காளைகளை வழங்குகிறார்கள். ஆனால் அவை பட்டத்துக் காளைக்கான போட்டியில் இடம்பெற முடியாது. அதனால் அவைகளை அடையாளம் காண, தானமாக கொடுக்கப்படும் மாடுகளின் காதின் ஒரு பக்கம் குறியிடுவார்கள். அதேபோல் தேவராவலு இன கன்றுகளை அடையாளம் காண அவைகளுக்கு கால் மற்றும் நெற்றியில் அடையாளம் வைப்பார்கள்.

பட்டத்துக்காளை தேர்வு முறை

இத்தொழு மாடுகளுக்குத் தலைவரான காளை ராஜகாளை என்று அழைக்கப்படுகிறது. இக்காளை இறந்துவிட்டால் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது ஒரு விழாவாக நடத்தப்படுகிறது. இன்றைய தினம் கோவில் முன் சூடம், பத்தி, வாழைப்பழம், வெற்றிலைப்பாக்கு போன்றவற்றை வைத்து அதன் முன் ஒரு கட்டு கரும்பை வைத்துவிடுவர். அதனைத் தொடர்ந்து தொழுவத்தில் உள்ள மாடுகளைக் கரும்பை நோக்கி ஓட விடுவர். முதலில் வந்து கரும்பை உண்ணும் மாடு புதிய ராஜகாளையாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அப்புதிய ராஜகாளைக்கு சந்தனம், குங்குமமிட்டு மாலை அணிவித்து மரியாதை செய்வர். அன்று முதல் அக்காளை ஸ்ரீநந்தகோபால் சுவாமியாகக் கருதப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடத்தப்படும். 

மேலும் வாசிக்க

முதல் பட்டத்துக் காளை இறந்துவிட்டால், அதனை தெய்வீக மரியாதையோடு அடக்கம் செய்துவிட்டு, அடுத்த பட்டத்துக்காளையை தேர்வு செய்வார்கள். அதற்காக ஊர் மக்கள் அனைவரும் கோவில் முன்பிருக்கும் தொழுவுக்கு திரண்டு வருவார்கள்.

சுடப்படாத பச்சை மண் செங்கற்களால் மேடை அமைத்து அந்த மேடையின் மேல் தோகையுடன் கரும்புகள் வைக்கப்படும். பால் காவடி எடுத்து வரப்படும். காவடியை, கரும்பு தோகை இருக்கும் மேடையில் வைத்து வழிபாடு நடத்தப்படும். அதன் பிறகு பாரம்பரிய உருமி இசைக்கப்படும். உருமி இசை ஒலிக்க, அந்த இனத்தை சேர்ந்த காளை கள் அனைத்தும் அவிழ்த்து விடப்படும். எந்த காளை முதலில் வந்து கரும்பு தோகையை சாப்பிடுகிறதோ அதுவே பட்டத்துக் காளையாக தேர்வு செய்யப்படும். பின்னர், அந்த காளைக்கு பட்டம் சூட்டி, அலங்கரித்து ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள்.

1997-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட பட்டத்துக் காளை 21-வது வயதில் கடந்த 2017 June மாதம் 6-ந்தேதி இறந்தது. இதனால், ஊரே கலங்கிப்போனது. பின்னர், நல்ல நாள் பார்த்து ஜூன் 16-ந்தேதி புதிய பட்டத்து காளை தேர்வு செய்யப்பட்டது.

பட்டத்துக்காளை பாரம்பரியம்

இந்த தேர்வு முறையை முன்னெடுத்து நடத்தும் மக்கள் 13-ம் நூற்றாண்டில் துங்கபத்ரா நதிக்கரையில் விவசாயம் செய்தவர்களின் பூர்வீகத்தை சேர்ந்தவர்கள். அங்கு நடந்த படையெடுப்பு காரணமாக, தங்களின் விவசாய நிலங்கள், வீடுகளை இழந்து, கால்நடைகளை மட்டும் அழைத்துக்கொண்டு மேற்கு தொடர்ச்சி மலை வழியாக இடம் பெயர்ந்தவர்கள். கம்பம் பகுதிக்கு வந்தபோது, அங்கு ஆட்சியில் இருந்த மன்னனிடம் சென்று, தங்களுக்கு விவசாயம் செய்யவும், கால்நடைகளை வளர்க்கவும் வாழ்வாதாரங்களை உருவாக்கித்தரும்படி கேட்டிருக்கிறார்கள்.

அப்போது மன்னன், ‘இங்கு எம் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். உங்களின் கால் நடைகளால் விவசாய பயிர்களுக்கு சேதம் வந்து விடக்கூடாது’ என்று கூறியதோடு, மாடுகளின், தன்மையை அறிய ஒரு சோதனையும் நடத்த விரும்பியிருக்கிறார். அதாவது, தோகையுடன் கரும்பை நட்டு வைத்து, அதன் முன்பு தானியங்களை குவித்துவைத்து, தானியங்கள் சிதறாமல் கரும்பை மாடுகள் சாப்பிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

மக்களும் தங்களின் கால்நடைகளை வேண்டி நின்றனர். அப்போது ஒரு காளை தனது கால்களை மற்றொரு காளையின் மேல் வைத்து நின்ற நிலையில் கரும்பு தோகையை தின்றதாம். அதனால் தானியம் எதுவும் சிதறவில்லை. இதை பார்த்த மன்னன் வியந்து, அவர்கள் விவசாயம் செய்யவும், கால்நடைகள் வளர்க்கவும் நிலம் கொடுத்துள்ளார்.

மன்னரை வியக்கவைத்த அந்த காளையை பட்டத்துக்காளையாக மக்கள் போற்றியிருக்கிறார்கள். மேய்ச்சலுக்கு செல்லும்போது முதல் காளையாக அந்த காளை சென்றதோடு, மற்ற காளைகளையும் வழி நடத்திச் சென்றிருக்கிறது. இப்படித்தான் பட்டத்துக்காளை பாரம்பரியம் தோன்றியிருக்கிறது.

பட்டத்து காளை இறந்து விட்டால் கம்பத்தில் சுப நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்வதை மக்கள் வழக்கமாக கொண்டு உள்ளனர். காளை இறந்த நாளில் இருந்து புதிய பட்டத்து காளை தேர்வு செய்யும் வரை அந்த கோவில் நடை அடைக்கப்பட்டு இருக்கும். புதிய பட்டத்துக் காளை தேர்வு செய்த பிறகே கோவில் நடை திறந்து வழிபாடுகள் நடக்கும். பட்டத்து காளை இறந்த 3 நாட்களுக்கு ஊரில் துக்கம் கடைபிடிக்கப்படும். திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தால், தவிர்க்க முடியாத சூழலில் வெளியூருக்கு சென்று திருமண நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்வார்கள்.

கம்பம் நந்தகோபாலன் சாமி தம்பிரான் மாட்டுத்தொழு வரலாறு

பட்டத்துக்காளை பராமரிப்பு

பட்டத்துக்காளையை பராமரிக்க 4 பேரை தேர்வு செய்கிறார்கள். அவர்களை ‘கடவுளின் பிள்ளைகள்’ என்று குறிப்பிடுகிறார்கள். பட்டத்துக் காளை இறந்தால் காரியம் செய்வதும், புதிய காளையை தேர்வு செய்து மரியாதை செலுத்துவதும் இந்த கடவுளின் பிள்ளைகளின் கடமை. இதற்காக அவர்கள் நால்வரும் தங்களின் குடும்ப உறுப்பினர்கள் இறந்தால் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யக்கூடாது என்ற வலுவான கட்டுப்பாடுகளும் உள்ளன.

“பட்டத்துக்காரர், கோடியப்பனார், பூசாரியப்பனார், பெரியமனைக்காரர் போன்ற நான்கு பதவிக்குரியவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களை நாங்கள் கடவுளின் பிள்ளைகளாக பாவிக்கிறோம். இந்த பதவிக்கு வந்து விட்டால், அவர்கள் எந்த துக்க நிகழ்வுக்கும் செல்ல மாட்டார்கள். தங்களின் தாய், தந்தை, மகன் உள்பட தங்களின் குடும்ப உறுப்பினர்கள் இறந்தால்கூட அவர்களின் உடலை பார்க்கக்கூடாது. குடும்பத்தில் யார் இறந்தாலும் அவர் களுக்கான இறுதிக்காரியங்களையும் செய்யமாட்டார்கள்.

பட்டத்து காளை இறந்து விட்டால், அந்த காளைக்கு மட்டுமே இறுதிக் காரியம் செய்வார்கள். வாழ்நாளில் இந்த 4 பேரும் 2 நிகழ்வுகளில் மட்டுமே புதிய ஆடைகள் உடுத்துவார்கள். அதாவது பட்டத்துக் காளை இறந்து விட்டால் அதற்கு காரியம் செய்யும்போதும், புதிய காளையை தேர்வு செய் யும் நாளிலும் தான் புதிய ஆடைகள் அணிவார்கள். மற்ற நாட்களில் புத்தாடை அணியமாட்டார்கள்.

இது மிகப்பெரிய தியாக வாழ்வுதான். ஆனால், இந்த பதவி கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். இந்த பதவியில் இருப்பவர் இறந்து விட்டால், அவர்களின் வாரிசுகள் அல்லது அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். திருமணம் ஆகாதவரே இந்த பதவிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். பதவிக்கு வந்த பிறகுதான் அவர்கள் திருமணம் நடக்கும்” என்றார்.

கம்பம் நந்தகோபாலன் சாமி

கம்பம், நந்தகோபாலன் சாமி தம்பிரான் மாட்டுத்தொழுவில் புதிய பட்டத்துக் காளை பவனிவந்து கொண்டிருக்கிறது. அங்கு அதற்கு ராஜ மரியாதை வழங்கப்படுகிறது. கடவுளாகவும் போற்றப்படுகிறது.

கம்பம் பகுதியில் போக்குவரத்து நெரிசலாகிவிட்டதால், கடந்த பத்தாண்டுகளாகத்தான் பட்டத்துக்காளை தொழுவத்தில் விடப்பட்டிருக்கிறது. முன்பெல்லாம் அதுவும் ராஜா போல் நகர் வலம் வந்துகொண்டுதானிருந்தது. தனக்கு பிடித்த வீட்டில் போய் உணவு எடுத்துக்கொண்டது. தெருவில் பட்டத்துக் காளை வருகிறது என்றாலே, ‘ஏய், ராசா வாராருப்பா… நம்ம வீட்டில் இருந்து ஏதாவது சாப்பிட கொடுப்போம்’ என்று மக்கள் உணவு வழங்கி மகிழ்ந்தார்கள். பசுந்தீவனம், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை மக்கள் விரும்பிக் கொடுத்து அவற்றை பட்டத்துக் காளை சாப்பிடும் அழகை பார்த்து ரசித்தார்கள். தற்போது வீதி உலா வராத ராஜாவை கோவிலுக்கு சென்று வழிபட்டு, தீவனம் வழங்குவதை மக்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். புதுமண தம்பதிகள் திருமணம் முடிந்ததும் பட்டத்துக் காளையை வணங்கி ஆசிபெற்று செல்வார்கள்.

வருங்கால தலைமுறக்கு

  • நமது ஒக்கலிகர் சமுதாய வரலாறு மற்றும் சமுதாய பழக்கவழக்கங்களை வாழும் தலைமுறையும் வருங்கால தலைமுறையும் ஆன்லைனில் அறிந்து கொள்ள உதவும் ஓர் டிஜிட்டல் முயற்ச்சிக்கான தளம்
  • பதிவின் நோகம் சரியாக இருந்தால் மறக்காமல் நமது மற்ற உறவினர்களும் பயனடையும் வகையில் சேர் செய்திடவும்.
  • .மேலதிக விபரங்கள் பதிவிட விரும்பும் சமுதாய அன்பர்கள் மினனஞ்சல் முகவரி அல்லது எங்களை தொடர்பு கொண்டு கட்டுரைகளை அனுப்பி வைக்கலாம் –
  • திரட்டிய தகவல்களில் தவறேதும் இருந்தால் மன்னிக்கவும்.
  • புரிந்துணர்வுக்கு நன்றி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button