HistoryVokkaligars

Vokkaligar – ஒக்கலிகர் சமூக கலாச்சார பழக்கவழக்கங்கள்

ஒக்கலிகர் – சமூக மற்றும் கலாச்சார பழக்கவழக்கங்கள் சமூகம் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் தனிப்பட்டு வாழும் மக்களின் உறவுமுறையைக் குறிப்பதாகும். ஒக்கலிகச் சமுதாயமும் தனது முன்னோர்களின் அடிப்படை அனுபவங்களால் நன்கு வடிவமைக்கப்பட்ட சீரிய சமுதாயமாய் வடிவெடுத்துள்ளது. அவர்களால் உருவாக்கப்பட்ட விதிமுறைகள் பரம்பரை பரம்பரையாக இன்றளவும் பின்பற்றப்பட்டு வருவது போற்றத்தக்க ஒன்றாகும். 

Vokkaligar – சமூக மற்றும் கலாச்சார பழக்கவழக்கங்கள் 

ஒக்கலிகர்ஊர் நாட்டாமைக்காரர்.இச்சமூக மக்கள் ஊர் நாட்டாமைக்காரர் என்பவரின் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்டு அவரத வழிகாட்டுதலிலேயே கோவில் திருவிழா, திருமண விழா போன்ற அனைத்து பொது நிகழ்வுகளிலும் பங்கேற்கின்றனர். இச்சமூக மக்கள் தத்தம் கிராமங்களில் தங்களுக்குள் சங்கம் அமைத்து தங்களுக்கென சில கட்டுப்பாடுகளை வரையறுத்து சீரிய வாழ்வு வாழ்கின்றனர். தங்கள் குடும்பங்களுக்குள்ளேயே பிற குடும்பங்களுடனான சிற்சில பிரச்சனைகளையோ தீர்த்து வைக்கும் பணிகளையும் இச்சங்கங்கள் செய்வதன் மூலம் இச்சமுதாயத்தில் சங்கம் என்ற அமைப்பு முக்கிய பணியாற்றி வருகிறது.

Vokkaligar – குடும்ப அமைப்பு 

இச்சமூகத்தின் நன்கு வடிவமைக்கப்பட்ட குடும்ப அமைப்பு முறை புராதன கலாச்சார பராம்பரியங்களில் ஒன்றாகும். தந்தை, தாய், குழந்தைகள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட குடும்ப அமைப்பில் மூத்தோருக்கு இளையோர் பணிந்து நடக்கும் இயல்பே இச்சமூகத்தின் அடிப்படையாகவும் குடும்ப வாழ்விற்கான முக்கியமான காரணியாகவும் விளங்குகிறது. 

தந்தை வழி தாத்தாவின் காலத்திற்குப் பின் தந்தை, தந்தைக்கு பின் மகன் என ஆண்களே குடும்பத்தலைவர்களாகவும், தந்தையின் சொத்துக்களுக்கு வாரிசாகக் கருதப்படுவதால் ஆண்குழந்தைகளின் பிறப்பு வரவேற்கப்படுகிறது. சமீப காலங்களில் பெண்களுக்கும் தந்தையின் சொத்தில் பங்கு வழங்கப்படுகிறது. 

கூட்டுக்குடும்ப அமைப்பு முறையும் இச்சமூகத்தின் முதன்மைப் பண்புகளில் ஒன்றாகும். குடும்பத்தலைவரின் மறைவுக்குப் பிறகும் கூட சகோதரர்கள் தத்தம் பேரக்குழந்தைகள் வரை கூட்டுக்குடும்பமாக வாழும் பண்பு இன்றளவும் நடைமுறையில் உள்ளது. 

சமீப காலங்களில் பணி நிமித்தமாக வெளியூர்களில் நகரங்களிலும் குடியேற வேண்டி இருப்பதால் அநேக மக்கள் தங்கள் சொந்த ஊரை விட்டு வெளியூர்களில் தனிக் குடும்பமாக வாழவேண்டிய சூழல் உள்ளது. 

முதுமைப் பருவமடைந்த தாய் தந்தையரைச் சீரிய முறையில் கவனித்துப் பணிவிடை செய்யும் பண்பு இச்சமூகத்தினரிடையே நிறைந்து காணப்படவதும் இச்சமூகத்தின் சிறந்த பண்புகளில் ஒன்றாகும். 

Vokkaligar – மகளிரின் நிலை – இல்லம் சார்ந்த பணி

இச்சமூகத்திலுள்ள மகளிரின் நிலை காலத்திற்குக் காலம் வேறுபட்டுக் காணப்படுகிறது. பழங்காலத்தில் திருமண வயது குறைவானதாக இருந்ததால் கல்வி கற்கும் வசதி வாய்ப்பும் குறைவாகவே இருந்தது. எனவே பெரும்பான்மையான மகளிர் கல்வியறிவில்லாதவர்களாக இருந்தனர். கணவனுக்கு தொண்டாற்றுவதும், அவரது தேவைகளை நிறைவேற்றதுவதும், அவருக்கு ஆலோசனை வழங்குவதுமே முதன்மையான கடமையாக இருந்தது. 

இல்லத்தரசிகளுக்கென இல்லம் சார்ந்த பணிகள் சில இருந்தன. குடும்பத்தை முறையாகவும் மென்மையாகவும் வழிநடத்திச் செல்வதே முதன்மையான பணியாக இருந்தது. இல்லப் பணிகளான உணவு சமைத்தல், வீட்டைச் சுத்தமாக வைத்திருத்தல், வீட்டுத்தோட்டம் அமைத்தல், விவசாயப் பணிகள், செல்லப் பிராணிகளை வளர்த்தல் போன்றவை முக்கியப் பணிகளாகும். ஓய்வு நேரத்தில் பொழுத போக்காக சிற்சில கைத்தொழில்களைச் செய்த வண்ணம் இருந்தனர். சுருங்கக் கூறின் அவர்களது பணிகள் அவரவர் குடும்ப பொருளாதாரத்திற்கு ஏற்ற வண்ணம் இருந்தது. 

ஆனால் தற்காலத்தில் அநேக மகளிர் சிறந்த கல்வி அறிவு பெற்று உரிய திருமண வயதில் திருமணம் செய்து பல்வேறு துறைகளில் பணி புரிவதன் மூலம் தனது குடும்ப வருமானத்தை உயர்த்துவதில் பெரும் பங்காற்றி வருகின்றனர். 

Vokkaligar – உணவுப் பழக்கவழக்கங்கள் 

தொடக்ககால ஒக்கலிகரின் வாழ்க்கை அவர் தம் உணவுப் பழக்கங்களிலும் எதிரொளிக்கிறது. அவர்களது உணவுமுறை சத்தானதாகவும், சுவையானதாகவும் உள்ளது. அக்காலத்தில் சோளம், கேழ்வரகு, சாமை மற்றும் கம்பு போன்ற தானிய வகைகளை உண்டு வந்துள்ளனர். ஆனால் தற்காலத்தில் அரிசி அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற உணவாக உள்ளது. சைவ உணவுகளில் அரிசி. நெய், பருப்பு, ரசம், சாம்பார், அப்பளம், ஊறுகாய், தயிர் என சிறப்பான நவீன சுவையுடன் சமைத்து உண்கின்றனர். 

தொக்கு கட்டு’ மற்றும் ‘குற்றை’

இச்சமூகத்திற்கென தனிப்பட்ட உணவு வகைகளாக ‘தொக்கு கட்டு’ மற்றும் ‘குற்றை’ என்று கூறப்படும் கீரைச் சாறும் கருதப்படுகிறது. 

‘தொக்கு’ என்பது கானம் பயறை வேக வைத்து அரைத்துக் கட் ரசம் கலந்து தயாரிக்கும் பருப்பு வகையைச் சேர்ந்தது. கட்டு ரசம் என்பது கானம் பயறை வேக வைத்து வடித்த சாற்றில் செய்யப்படும் ஒரு வகை ரசமாகும். மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, பூண்டு ஆகிய பொருட்களை மட்டும் சேர்த்து அரைத்து புளி மற்றும் தக்காளி கரைசலில் கலந்து கானம் பயறு வேக வைத்து வடித்த சாறு சேர்த்து தயாரிக்கப்படம் ரசமாகும். இவ்வகை உணவு உண்பது நம் உடலில் உள்ள கொழுப்புச்சத்தைக் குறைக்க உதவுவதால் உடல் நலத்திற்கும் நல்லது. 

இதனாலேயே இச்சமூக மக்கள் ‘தொக்கு தின்னி கவுடர்’ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. அந்த காலத்தில் திருமண விருந்தாக இவ்வுணவு பரிமாறப்பட்டு வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

குற்றை என்பது கீரையை வேகவைத்த கீரைச் சேர்ந்த சமைக்கும் குழம்பு வகையைச் சேர்ந்தது. ஊற வைத்த பச்சரிசி மற்றும் துவரம்பருப்பை மிளகாய்வற்றல் சேர்த்து அரைத்து புளி மற்றும் தக்காளி கரைசலில் கலந்து ஒன்றிரண்டாகத் தட்டிய வெங்காயம் மற்றும் கீரை வேக வைத்த நீரைச் சேர்த்து இக்குழம்பு தயாரிக்கப்படுகிறது. 

இவ்விரு உணவு வகைகளிலும் எண்ணெய், சோம்பு, கசகசா போன்ற மசாலாப் பொருட்கள் சேர்க்கப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

நவீன காலத்தில் நாகரிக மாற்றத்தால் பிரியாணி, நூடுல்ஸ் போன்ற உணவு வகைகள் தயாரிக்கப்படும் போதிலும் மேற்சொன்ன உணவு வகைகள் இச்சமுதாய மக்களின் உணவு முறையில் பிரத்யேகமாக விரும்பி உண்ணும் இடத்தைப் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

vokkaligars

Vokkaligar உடைமுறை 

பழங்காலத்தில் ஆண்கள் தென்னிந்திய பாரம்பரிய உடைகளான வெள்ளை வேஷ்டி மற்றும் தலை வழியே கோர்த்து அணியும் பக்கவாட்டில் பையுடன் கூடிய சட்டையும் தோலில் ஒரு துண்டு என்ற முறையிலான ஆடையுடன் அணிந்துள்ளனர். பெண்கள் எட்டுகஜம் அளவு நீளமான நூல் புடவையை பின் கொசுவம் வைத்து அணையும் முறை இருந்தது. 

கற்காலத்தில் ஆண்கள் பேண்ட் சட்டை, அரைக்கால் சட்டை எனவும், பெண்கள் பல்வகை புடவைகள் மற்றும் சுடிதார் போன்ற நவ நாகரீக உடைகள் அணியும் முறையும் வழக்கில் உள்ளது. 

Vokkaligar – அணிகலன்கள் 

இச்சமுதாய மகளிர் தொங்கட்டானுடன் கூடிய கம்மல், காது வளையம், நெக்லஸ், கழுத்துச் சங்கிலி, கைச்சுத்து, வளையல், கொலுசு, மூக்குத்தி, மோதிரம் மற்றும் மெட்டி ஆகிய அணிகலன்களை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 

இச்சமுதாய மக்கள் அணியும் நகைகள் மிதமிஞ்சியதாகவும் இல்லாமல் புதுமையானதாகவும் நாகரிகமாகவும் நேர்த்தியாகவும் அமைந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஆண்கள் மெல்லிய சங்கிலி, கைச்சுத்து மற்றும் மோதிரம் அணிகின்றனர். திருமணத்தின் போது காலில் மெட்டி அணியும் வழக்கமும் உள்ளது.

முதல் இரண்டு குழந்தைகள் பிறந்து இறந்த பிறகு மூன்றாவதாக பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மூக்குத்தி அணியும் வழக்கமும் நடைமுறையில் இருந்திருக்கிறது. 

வசதியான மகளிர் தங்க நகைகளை அணிந்திருக்கும் வேளையில் வசதி குறைவான மகளிர் கழுத்தில் தாலி அணியும் வழக்கம் இல்லாததால் வெறும் கழுத்தில் இருப்பதும் வழக்கத்தில் உள்ளது.

Vokkaligar – நாகரிகம் 

இச்சமூகத்தை நாகரிகத் தொட்டில் என்று கூட அழைக்கலாம். ஏனெனில் இச்சமூகத் மக்கள் சீரிய நாகரிகமான வாழ்வு வாழ்கிறார்கள். வீடுகளைச் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருக்க கூடியவர்கள். கூரை வீடாக இருந்தாலும் மாடி வீடாக இருந்தாலும் பொருட்களை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து சுத்தமாகப் பராமரிக்கும் பண்பு உடையவர்கள்.

வீடுகளின் அமைப்பு வீட்டு உபயோகப் பொருட்கள், அணியும் உடை மற்றும் அணிகலன்கள் பயன்படுத்தும் பாத்திரங்கள் பின்பற்றும் பழக்க வழக்கங்கள் பிறரடன் பழகும் விதம் என அனைத்திலும் சிறந்து விளங்குபவர்களாக உள்ளனர். எனவே இச்சமூகம் மிகச் சிறந்த நாகரிகத்தின் பிறப்பிடம் என்றால் அது மிகையல்ல.

நன்றி : திரு.V.S உடையாளி தென் மாவட்ட ஒக்கலிகர் காப்பு மகாஜன சங்கம்

Vokkaligar – வருங்கால தலைமுறக்கு

  • நமது ஒக்கலிகர் சமுதாய வரலாறு மற்றும் சமுதாய பழக்கவழக்கங்களை வாழும் தலைமுறையும் வருங்கால தலைமுறையும் ஆன்லைனில் அறிந்து கொள்ள உதவும் ஓர் டிஜிட்டல் முயற்ச்சிக்கான தளம்
  • பதிவின் நோகம் சரியாக இருந்தால் மறக்காமல் நமது மற்ற உறவினர்களும் பயனடையும் வகையில் சேர் செய்திடவும்.
  • .மேலதிக விபரங்கள் பதிவிட விரும்பும் சமுதாய அன்பர்கள் மினனஞ்சல் முகவரி அல்லது எங்களை தொடர்பு கொண்டு கட்டுரைகளை அனுப்பி வைக்கலாம் –
  • திரட்டிய தகவல்களில் தவறேதும் இருந்தால் மன்னிக்கவும்.
  • புரிந்துணர்வுக்கு நன்றி

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button