MatriMonyVokkaligars

Vokkaligar Marriage – ஒக்கலிகர் திருமணம்

Vokkaligar Marriage – ஒக்கலிகர் திருமணம்.ஒக்கலிக சமூகத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுப்படி இச்சமூகத்தின் தோற்றம் இமயமலைப் பகுதியாக இருப்பதால் இச்சமூகத்தின் சடங்குகள் திராவிட நாகரிகத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. 

Vokkaligar – ஒக்கலிகர் திருமணம்

இச்சமூகத்தில் ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை நிகழும் எல்லா நிகழ்வுகளிலும் தாய்மாமன் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது

  • குழந்தை பிறப்பு 
  • பெண்கள் பூப்படைதல் 
  • திருமண நிச்சயதார்த்தம் 
  • திருமணச்சடங்கு 
  • ஈமச் சடங்கு 

Vokkaligar – திருமணச் சடங்கு

ஒக்கலிகர் சமூகத்தின் திருமணச் சடங்கு நான்கு நிலைகளில் நடைபெறுகிறது. அவையாவன: 

  • முகூர்த்தக்கால் நடுதல்
  • புவ்வைக் குட்டுதல் 
  • தலைப்பாகை கட்டுதல்
  • திருமண நாள் சடங்கு

Vokkaligar – முகூர்த்தக்கால் நடுதல்

இந்தச் சடங்கு திருமணத்திற்கு இரண்டு இல்லது மூன்று நாட்களுக்கு முன் நடைபெறும்.

அந்த நாளில் ஒன்பது அல்லது 11 கணுக்களைக் கொண்ட மூங்கில் கம்பு ஒன்று எடுத்துக் கொள்ளப்பட்டு அதன் கணுக்களுக்கிடையே செம்மண் மற்றும் சுண்ணாம்பு கலவையால் மாற்றி மாற்றி வண்ணமிட வேண்டும். இப்பணியைச் செய்ய வேண்டிய பொறுப்பு மணமகனின் தாய்மாமன் மனைவியைச் சார்ந்ததாகும். அதனைத் தொடர்ந்து மணமகனின் தாய்மாமன் நவதானியங்கள் ரூ. 1.25 புங்கை இலை மற்றும் மாவிலைகளை அம்மூங்கில் கம்பின் உச்சியில் கட்டி மணமகனின் வீட்டின் முன்புறம் வடக்கிழக்கு அல்லது தென்மேற்கு மூலையில் அம்மூங்கிலை நட வேண்டும். இச்சம்பவம் முகூர்த்தக்கால் நடுதல் எனப்படும்.

இந்தச் சமயத்தில் ‘உருமி’ எனப்படும் தாள இசைக்கருவி இசைக்கப்பட வேண்டும். நடப்பட்ட இம்முகூர்த்தக்காலின் முன் மணமகனின் தாய்மாமன் மனைவியால் குத்துவிளக்கு ஏற்றப்பட்ட பின் தாய்மாமனால் உடைக்கப்பட்ட தேங்காய், வாழைப்பழம், முன்னிலையில் சிறு சிறு கிண்ணங்களில் வைக்கப்பட்டுள்ள மஞ்சள், நீர், தேன், நெய், பால் மற்றும் ஹோமியத்தை அம்முகூர்த்தக்காலில் சிறிது சிறிதாக ஊற்றி சந்தன குங்குமமிட்டு தீப ஆராதனை காட்டி வழிபட வேண்டும்.

தாய்மாமனைத் தொடர்ந்து பிற உறவினர்கள் ஒருவர் பின் ஒருவராக மேற்கூறிய முறையில் வழிபட வேண்டும். முகூர்த்தக்கால் நட்டதைத் தொடர்ந்து வீட்டின் முன் பந்தல் போடப்படும்.

Vokkaligar – புவ்வை குட்டுதல்

இவ்விழாவில் மணமகனின் தாய்மாமன் நெல்லை மரக்காலில் அளந்து போட வேண்டும். அக்குலத்தில் பிறந்த திருமணமான பெண்கள் (பிறந்த வீட்டு பிள்ளைகள்) ஐந்து பேர் அலங்கரிக்கப்பட்ட உலக்கையால் அந்த நெல்லை குற்றியவாறு சுற்றி வர வேண்டும். ஒரு சுற்றுக்கு ஒரு முறை தாய்மாமனின் மனைவி முறத்தால் புடைத்துச் சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறே மூன்று முறை செய்த பின் அவ்வைந்து பேரில் ஒருவர் கையில் உலக்கைகள் ஐந்தும் கொடுக்கப்பட்டு மற்றொருவரிடம் மூன்று முறை மாற்றி மாற்றி கொடுத்தபின் உலக்கைகள் பூஜை அறையில் ஒரு மூலையில் நிறுத்தி வைக்கப்பட வேண்டும். 

குற்றப்பட்ட நெல் ஒரு கூடையில் எடுத்து வைக்கப்பட்ட பின் பூஜை அறையில் படிக்கட்டு வடிவில் அலங்கரிக்கப்ட்ட மேடையில் ஒரு வரிசையில் மூன்று பெரிய மரக்கால்களும் அடுத்த வரிசையில் முறையே ஆமணக்கு, உப்பு, விரலிமஞ்சள் நிரப்பப்பட்ட சிறிய மரக்கால்களும் வைக்கப்பட்டு அதனருகே முகூர்த்தப் புடவையும் ஒரு தட்டில் மஞ்சள் தடவப்பட்ட அரிசியும், திருநீர், சந்தனம், குங்குமம், சாம்பிராணி புகை, சூடத்தட்டு முதலியன வைக்கப்பட வேண்டும்.

முதலில் மணமகனின் தாய்மாமனும் அவரைத் தொடர்ந்து பிற உறவினர்களும் முறையே சிறிய மரக்காலில் உள்ள ஆமணக்கு, உப்பு மற்றும் விரலி மஞ்சள் ஆகியவற்றை ஒன்றொன்றாக நோ நேராக உள்ள பெரிய மரக்காலில் இட்டு மஞ்சள் அரிசியை முகூர்த்த புடவை மேல் போட்டு ஆசிர்வதித்து வணங்கிச் செல்ல வேண்டும்.

விழாவில் பங்கேற்ற பெண்களுக்குக் கண்ணாடி வளையல் வழங்கப்படுவதோடு வலது தோள் பட்டையில் ஒரு மஞ்சள் நிற அடையாளம் வைப்பது வழக்கமாக உள்ளது. 

Vokkaligar – தலைப்பாகை கட்டுதல்

புவ்வை குட்டும் சடங்கு முடிந்ததும் மணமகனின் தாய்மாமன் மணமகனுக்கான திருமண புத்தாடை கொடுத்து அணிவிக்கச் செய்தபின் பட்டுத்துண்டை தலைப்பாகையாக மணமகனுக்கு கட்டி விடுதல் வேண்டும்.

இச்சடங்கு மணமகன் குடும்பஸ்தன் ஆகத்தகுதி உடையவனாகிறான் என்பதையும் அதனால் அவனுக்கு அதிகப் பொறுப்புகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது என்பதையும் உணர்த்தி அதைச் செவ்வனே செய்ய வாழ்த்துவதற்காகச் செய்யப்படுகிறது.

திருமண நாளன்று குறித்த நேரத்தில் மணமகன் வீட்டார் உறவினர் புடை சூழ ஊர்வலமாக திருமண பொருட்களாக 5 அல்லது 7 தட்டுகளில் பழம், கல்கண்டு, மஞ்சள், அரிசி, முகூர்த்தப்புடவை, பூ, மாலை, தேங்காய் ஆகிய பொருட்களை மணமகனின் பிறந்த வீட்டுப்பிள்ளைகள் தூக்கியம் மணமகனின் தாய்மாமன் மனைவி புவ்வை குட்டும் சடங்கில் பயன்படுத்திய நெல் வைக்கப்பட்ட ஒரு பிரம்புக் கூடை மற்றும் மூங்கில்குச்சி. புங்கைமரக்கிளை மற்றும் நாணல் புல் போடப்பட்ட ஒரு பித்தளைக் குடத்தைத் தூக்கியும் உறுமிக்காரர் உறுமி அடித்தவாறு தாய்மாமனால் துணை மாலை அணிவிக்கப்பட்ட மணமகனை மணமேடைக்கு அழைத்து வந்து அறிமுகம் செய்த பின் மேடை முன் விரிக்கப்பட்ட கம்பளத்தில் பழம் மற்றும் இதர பொருட்கள் அடங்கிய தட்டுகளை வைத்த விட்டு மூங்கில் குச்சி. நாணல் மற்றும் புங்கை மரக்கிளை அடங்கிய குடத்தை திருமண இருக்கையின் பின்புறமாக வைக்க வேண்டும்.

vokkaligar marriage

மரக்கிளை காரணம்

இம்மரக்கிளையை வைத்து திருமணம் செய்வதற்கான பின்னணி காரணம் வருமாறு :

முகமதிய நவாப் காரணமாக ஒக்கலிகர் சமுதாயம் ஜனகல்வர் தலைமையில் துங்கபத்திரா நதிப்பகுதியைக் கடந்து தென்னிந்தியா நோக்கி இடம் பெயர்ந்து வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போது அகலமான துங்கத்திரா நதியில் வெள்ளம் கரைபுரண்டோடுகையில் வழி விடுமாறு கடவுளை வேண்டியதும் கரையோரம் இருந்த மூங்கில் மரங்கள், புங்கை மரங்கள் மற்றும் நாணல் புல் ஆகியன வளைந்து பாலம் அமைத்து நதியைக் கடக்க உதவி புரிந்ததாகவும் இந்நிகழ்வுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் அவ்வாறே புதுமணத் தம்பதிகளுக்கு ஆசி வழங்க வேண்டியும் இம்மரக்கிளைகள் திருமணத்தின் போது கட்டாயமாக வைக்கப்படுகின்றன.

இக்காரணங்களாலேயே ஒக்கலிக சமூக மக்கள் கோரைப் பாயைப் பயன்படுத்தக்கூடாது. மேலும் மூங்கில் மற்றும் புங்கை மரக்கிளைகளை விறகாகப் பயன்படுத்தக்கூடாது என்றும் கூறப்படுகிறது.

திருமண நாள் சடங்கு

மணமகனுக்கும் மணமகளுக்கும் அவரவர் தாய்மாமன் மூலம் கால்விரலில் மெட்டி அணிவிக்கப்பட வேண்டும். மணமகளுக்கு அவளது தாய்மாமன் மனைவியால் துணைமாலை அணிவிக்க வேண்டும்.

அதனை தொடர்ந்து மணமேடை முன் விரிக்கப்பட்ட கம்பளத்தில் வைக்கப்பட்ட திருமண பொருட்களைச் சுற்றி திருமண குடும்பம் தொடர்பான உறவினர்கள் மற்றும் ஊருக்கு முக்கியமான பிரமுகர்கள் அமர வேண்டும். அதில் கவுடு என்பவர் மிக முக்கியமான பிரமுகர் ஆவார். படவனார் என்றும் செளந்திரவர் குலத்தைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொருவர் கட்டாயமாக இக்குழுவில் இடம் பெற வேண்டும். 

அதன்பின் கவுடு என்பவர் சேர்வைக்காரரை அழைத்து அழைக்க வேண்டியவர்களை அழைத்தாயிற்றா எனக் கேட்டு அதன்பின் மீண்டும் ஒரு முறை மணமகள் மற்றும் மணமகனின் பெற்றோர் மற்றும் தாய்மாமன்களிடம் சம்மதம் கேட்ட பின் மணமகனின் தாய்மாமனிடம் மணப்பெண்ணுக்குரிய முகூர்த்தப்பட்டு மற்றும் மஞ்சள் புடவையைக் கொடுத்து அதை மணமகளின் தாய்மாமனிடம் கொடுக்கச் செய்ய வேண்டும்.

மணமகளின் தாய்மாமன் அப்புடவையை தன் மனைவியிடம் கொடுத்து மணமகளை அணிந்து வரச் செய்ய வேண்டும்.அதற்கிடையில் கம்பளத்தில் வைக்கப்பட்டுள்ள தேங்காய், வெற்றிலை, பழம் முதலான பொருள்கள் தனித்தனி தாம்பூலப் பையில் போட்டு முதல் பை ஒக்கலிக சமூகத்திற்கென பொது கடவுளான நந்தகோபால் சாமிக்கும் எஞ்சிய பைகள் முறையே நாட்டாமைக்காரர். தானமனைக்காரர். இருதரப்பு தாய்மாமன்கள், உறுமிக்காரர் மற்றும் வண்ணான் ஆகியோருக்குப் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும்.

மஞ்சள் அரிசி திருமணத்திற்கு வருகை புரிந்திருக்கும் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட பின் உறுமிக்காரர் மூலம் உறுமி முழங்க மணமகனின் சகோதரிகள் சென்று மணமகளை மணமேடைக்கு அழைத்து வர வேண்டும். மணமேடைக்கு வந்து மேடை முன் அமர்ந்துள்ள அனைவரையும் பார்த்து கும்பிட்ட பின் மணமகனை மணமகள் மூன்று முறை வலம் வந்து மணமகனின் காலில் விழுந்து வணங்கி எழுந்ததும் மணமகனுக்கு தாய்மாமனும் மணமகளுக்குத் தாய்மாமனின் மனைவியும் பெரிய மாலை அணிவிப்பர். 

அதனைத் தொடர்ந்து மணமகனும், மணமகளும் சூலம் பார்த்த அதற்கேற்ப கிழக்கு மேற்காகவோ, வடக்கு தெற்காகவோ நின்று ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக் கொள்ள வேண்டும். அச்சமயத்தில் பொதுமக்கள் மஞ்சள் அரிசியை மணமக்கள் மீது தூவி ஆசிர்வாதம் செய்வர். அதனைத் தொடர்ந்து மணமகனின் தாய்மாமன் மணமகளின் கையைப்பிடித்து மணமகனிடம் ஒப்படைக்க வேண்டும். அதன் பின் சந்தனம், குங்குமம், திருநீர், ஒரு வெற்றிலை போடப்பட்ட பசும்பால் ஆகியவற்றைக் கொண்டு மணமக்களுக்குப் பொட்டு வைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது புவ்வைக் குட்டுதல் நிகழ்வின் போது பயன்படுத்திய நெல் வைக்கப்ட்ட கூடையை மணமக்களின் காலடியில் கொண்டு வந்து வைக்க வேண்டும்.

மணமக்களைச் சந்தனம், குங்குமப்பொட்டு வைத்து ஆசிர்வதிக்கும் முதல் உரிமை தாய்மாமனுக்கு வழங்கப்படுகிறது. பொட்டு வைத்த பின் குனிந்து கூடையில் உள்ள நெல்லை இருகைகளிலும் சிறிது அள்ளி மணமக்களின் காலில் தூவியும் ஆசிர்வதிக்க வேண்டும்.

தொடர்ந்து மணமக்களின் பெற்றோர் மற்றும் உற்றார் உறவினர்கள் ஒவ்வொருவராய் அவ்வாறே பொட்டு வைத்த ஆசிர்வதித்துத் திரும்புவர்.

மணமக்கள் இருவரும் வீட்டு வாசலில் வைக்கப்பட்டுள்ள பால் பாத்திரம் மற்றும் உப்பு சாடியில் கையை நுழைத்துவிட்டு வலதுகால் எடுத்து வைத்து வீட்டினுள் நுழைய வேண்டும்.

மணமகள் பூஜை அறையில் வைக்கப்பட்டுள்ள குத்துவிளக்கை ஏற்றி வைத்து இருவரும் இறைவனை வழிபட்டதும் பாலும் பழமும் பருகக் கொடுக்க வேண்டும்.

அதன்பின் இருவரும் மணமகனின் குலதெய்வக் கோவிலுக்குச் சென்று திரும்பிய பின் இச்சடங்கில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்களும் கலந்து கொள்வர்.

மடிஅரிசி கூட்டுதல்

மாலையில் மணமகன் வீட்டில் மடிஅரிசி கூட்டுதல் என்ற சடங்கு நடைபெறும். இச்சடங்கில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்களும் கலந்து கொள்வர்.

புவ்வை குட்டுதலில் பயன்படுத்தப்பட்ட நெல்லை தீட்டி அரிசியாக்கி ஊறவைத்து வெல்லப்பாகு, வறுத்த உளுந்தம் பருப்பு, பொடிதாக நறுக்கிய தேங்காய் ஆகியவை கலந்த அரிசியைத் தயாரித்து மணமகளைத் திருமண மஞ்சள் புடவையைப் பின்கொசுவம் வைத்து அணியச் செய்து வாழை இலையில் தேங்காய், வாழைப்பழம் மற்றும் இவ்வரிசி சிறிது வைத்து மணமகளின் புடவை முந்தாணையில் வைத்து பிடிக்கச் செய்து மூன்று முறை உட்கார்ந்து எழுந்திருக்கச் செய்ய வேண்டும். பின் அவ்வரிசியை அங்கு வந்துள்ள உறவினர்களுக்கும் அண்டை வீட்டாருக்கும் விநியோகிக்க வேண்டும்.

Vokkaligar – தாலிகட்டும் வழக்கம் இல்லை

ஒக்கலிகர் தாலிகட்டும் வழக்கம் இல்லை – புராணக் காரணம்

ஒக்கலிக திருமண விழாவிலோ இதர விழாக்களிலோ புரோகிதர்களை ஈடுபடுத்தும் வழக்கம் இல்லை. மேலும் ஒக்கலிகர் திருமணத்தின் போது தாலிகட்டும் வழக்கமும் நடைமுறையில் இல்லை.

திரு. நரசிம்மஐயங்கார் என்பவர் மைசூர் பகுதியில் வாழ்ந்த ஒக்கலிக மக்கள் விவசாய முறையில் நெறி தவறி நடந்ததால் தாலியை விட்டுக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகப் பின்வரும் புராணக் கதை மூலம் விளக்குகிறார்.

தசரதர்குமாரர் ராமர் வாழ்ந்த காலத்தில் ராமர் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் சென்றிருந்த போது அவருக்குப் பதிலாக பரதன் ஆட்சி செய்து வந்த காலத்தில் அப்பகுதியில் வாழ்ந்த ஒக்கலிக விவசாயிகள் அரசுக்கு வரி சரியாகக் கட்டாமல் ஏமாற்றி வந்ததாகவும், அரசு பூமிக்கு மேல் விளைந்துள்ள பயிரை வரியாகச் செலுத்த வேண்டும் என்று அறிவித்ததால் கிழங்கு வகைகள், நிலக்கடலை போன்ற பூமிக்கு அடியில் விளையும் பயிர்களை விளைவித்து மேற்பகுதியான வெறும் தண்டையும் செடியையும் மட்டும் அரசுக்கருவூலத்திற்கு அனுப்பி வைத்ததாகவும் அதைக் கண்ட அரசு பூமிக்கடியில் விளையும் பயிர்களை வரியாகச் செலுத்த வேண்டும் என்ற போது நெல், கேழ்வரகு, கோதுமை போன்ற பயிர்களை விளைவித்து அதன் வைக்கோலை வரிவசூலிப்பவரிடம் ஒப்படைத்ததாகவும், அதனால் அரசுக் கருவூலம் காலியானதாகவும் ராமர் வனவாசம் முடிந்து பதவிக்கு வந்தவுடன் கருவூல நிலையைக் கண்டு கருவூலத்தை நிரப்புவதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்கும் விதமாகவும் ஏமாற்றும் விவசாயிகளைத் தண்டிக்கும் விதமாகவும் சாம்பல் பூசணி வைத்துக்கொண்டு எஞ்சிய விதைகளை பாலில் இட்டு வேகவைத்து இவ்விதைகளை விவசாயிகளிடம் கொடுத்து பயிரிடச் செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் வரிகட்டும் படி கூறியதாகவும் வரி கட்ட வேண்டிய நேரத்தில் விவசாயிகள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பூசணி விதைகள் முளைக்கவில்லை என மன்னரிடம் சென்று முறையிட ராமரோ தான் விளைவித்த பூசணிக்காயைக் காட்டி அதன் எடைக்கு இணையான தங்கம் வழங்க வேண்டும் என ஆணையிட்டதைத் தொடர்ந்து தங்களிடம் இருந்த தங்கங்களையெல்லாம் வைத்தும் எடை சரியாகத் தராசு தன் மனைவியரின் தாலியை வைத்ததும் தராசு சரியானதாகவும் அந்த தங்கப் பொருள்கள் அனைத்தும் அரசுக் கருவூலத்திற்குச் செலுத்தப்பட்டதாகவும் அன்று முதல் ஒக்கலிகர் இன மக்கள் தாலி அணிவதில்லை என்றும் சாம்பல் பூசணிக்காயைப் பயிரிடுவதில்லை என்றும் கூறப்படுகிறது.

Vokkaligar – வருங்கால தலைமுறைக்கு

  • நமது ஒக்கலிகர் சமுதாய வரலாறு மற்றும் சமுதாய பழக்கவழக்கங்களை வாழும் தலைமுறையும் வருங்கால தலைமுறையும் ஆன்லைனில் அறிந்து கொள்ள உதவும் ஓர் டிஜிட்டல் முயற்ச்சிக்கான தளம்
  • பதிவின் நோகம் சரியாக இருந்தால் மறக்காமல் நமது மற்ற உறவினர்களும் பயனடையும் வகையில் சேர் செய்திடவும்.
  • திரட்டிய தகவல்களில் தவறேதும் இருந்தால் மன்னிக்கவும்.
  • மேலதிக விபரங்கள் பதிவிட விரும்பும் சமுதாய அன்பர்கள் மினனஞ்சல் முகவரி அல்லது எங்களை தொடர்பு கொண்டு கட்டுரைகளை அனுப்பி வைக்கலாம் –

புரிந்துணர்வுக்கு நன்றி. நன்றி.நன்றி .

Related Articles

8 Comments

  1. யுகாதி எனும் மிக முக்கிய பண்டிகை விடுபட்டுள்ளது.

    1. நிச்சிசயம் விடுபட்ட தகவல்கள் நிரப்பபடும். நன்றி வருகைக்கும் மேலான கருத்திற்க்கும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button